×

பரிதாபங்கள் கோபி சுதாகருக்கு எம் ஆர் ராதா பெயரில் விருது வழங்க வேண்டும்!

 

"பரிதாபங்கள்" யூடியூப் சேனலுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது.கோபி சுதாகருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "சொசைட்டி பாவங்கள்" வீடியோவால் எழுந்த சர்ச்சை காரணமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சாதியக் கட்சிகள் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

"பரிதாபங்கள்" யூடியூப் சேனலில் வெளியான "சொசைட்டி பாவங்கள்" என்ற வீடியோ சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது. பல சாதியக் கட்சிகள் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்தன. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கோபி, சுதாகர், டேவிட் ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவை நீக்க வேண்டும். சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சௌத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோபி சுதாகர் ஆகிய இருவருக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கோபி சுதாகர் வெளியிட்ட வீடியோவில் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் சாதிய வெறி பிடித்தவர்கள் கோபி சுதாகரை மிரட்டுவதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர தலைவர் நிர்மல் குமார் கூறினார்.

மேலும், எம்.ஆர். ராதா சாதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல், கோபி சுதாகர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், "எம் ஆர் ராதா அந்த காலத்தில் எவ்வாறு சாதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினாரோ அதுபோன்று தற்பொழுது கோபி சுதாகர் இருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் எனவே தமிழக அரசு இருவருக்கும் எம் ஆர் ராதா என்ற ஒரு விருதை உருவாக்கி அதனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்" என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.