×

ரஜினியை உலுக்கிய மரணம்... கண்ணீருடன் நேரில் அஞ்சலி

 

நடிகர் ரஜினிகாந்துக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியார் K.S நாராயணசாமி (கோபாலி) காலமானார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் படித்தபோது அங்கே நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுக்கின்ற வாத்தியராக இருந்த கே.எஸ் நாராயணசாமி என்கின்ற கோபாலி (92) இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளார். ஆக்டிங் மாஸ்டராக இருந்த இவர் ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி,ராதாரவி உள்ளிட்ட பல்வேறு உச்ச நட்சத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சியை வழங்கியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் மீது அவருக்கு அளவில்லாத அன்பு இருந்தது எனவும் அதன் காரணமாகத்தான் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்தார் எனவும் கூறப்படுகிறது. கோபாலி அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருப்பவர் ரஜினிகாந்த். இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் பணியாற்றிய கோபாலி, எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை வயது மூப்பு காரணமாக கோபாலி உயிரிழந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரது இல்லத்தில் இருந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.மறைந்த கோபாலியின் மகள் வைஷ்ணவி தீபக் இறுதி சடங்கை செய்தார்.