காலையிலேயே வந்த குட் நியூஸ்..!! குறையப் போகும் சமையல் எண்ணெய் விலை..!!
சமையல் எண்ணெயின் விலையைக் கட்டுப்படுத்த அடிப்படை இறக்குமதி சுங்க வரியை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய அரசு. இதன்படி சூரியகாந்தி, பாமாயில் மற்றும் சோயாபீன் உள்ளிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு இன்று (செப்டம்பர் 24) முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான இறக்குமதி அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் மீதான 10 சதவீத வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, பூஜ்ஜிய சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கான சுங்க வரி 32.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 22.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு வரியை குறைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வரி குறைப்பு நடவடிக்கை மூலமாகச் சில்லறை விற்பனை சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது