மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த குட் நியூஸ்!
சென்னையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதிதாக லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 1.30 கோடி பெண்கள் மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் சில தகுதியான பெண்களுக்கு இன்னும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு, எந்த தகுதி பெண்ணையும் விடுபடக் கூடாது என்பதற்காக அரசு புதிய குறைதீர்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உதவித் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், அருகிலுள்ள e-Sevai அல்லது CSC மையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது [www.kumt.in.gov.in](http://www.kumt.in.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘குறைதீர்வு / Grievance’ என்ற சேவையைத் தேர்வு செய்து ஆன்லைனிலேயே புகார் பதிவு செய்யலாம். இதில் விண்ணப்பித்தவர் பெயர், குடும்பத் தலைவர் பெயர், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்த பிறகு OTP வரும். அந்த OTP மூலம் உள்நுழைந்து ஆதார், ரேஷன் அட்டை, வங்கி விவரம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் இந்த மேல்முறையீடு, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் பரிசீலிக்கப்படும். தகுதி உறுதி செய்யப்பட்டால், உரிமைத் தொகை வழங்கப்படும். ஆனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த குறைதீர்வு முறையைப் பயன்படுத்த முடியும். ஒரே குடும்ப அட்டை எண் அல்லது கைப்பேசி எண்ணை பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.