சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! இனி மாதவரம், மணலி ஏரிகளில் படகு சவாரி செய்யலாம்..!
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாதவரம் மண்டலம், வார்டு-27க்குட்பட்ட மாதவரம் ஏரியில் அம்ரூத் 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.15.03 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாதவரம் ஏரி படகு குழாமினை இன்று (13.01.2026) பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்து, படகு சவாரியினை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர், மணலி மண்டலம், வார்டு-20க்குட்பட்ட மணலி ஏரியில் அம்ரூத் 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணலி ஏரி படகு குழாமினைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
பின்னர், வார்டு-21க்குட்பட்ட மணலி பாடசாலை தெருவில் மூலதன நிதியில் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
தொடர்ச்சியாக, வார்டு-15க்குட்பட்ட மணலி புதுநகர் 80 அடி சாலையில் மூலதன நிதியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பின்னர், திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7க்குட்பட்ட சாத்தாங்காடு கிராமத்தில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
ஆக மொத்தம் மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் ரூபாய் 39.78 கோடி மதிப்பீட்டில் 5 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மேயர் ஆர்.பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் (மாதவரம்), கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), துரை சந்திரசேகர் (பொன்னேரி) மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, (பணிகள்), கட்டா ரவி தேஜா, (வடக்கு வட்டாரம்), சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் கௌரவ் குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.நந்தகோபால் (மாதவரம்), ஏ.வி.ஆறுமுகம் (மணலி), தி.மு.தனியரசு (திருவொற்றியூர்), மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாதவரம் மண்டலத்தில் நீர்நிலை பகுதியான மாதவரம் ஏரி 2,67,540 சதுர மீட்டர் பரப்பளவுடன், 2,350 மீட்டர் சுற்றளவுடன், 4,57,488 கனமீட்டர் நீர் கொள்ளளவு கொண்டதாக இருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் காரணமாக நீரின் கொள்ளளவு 5,77,879 கனமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஏரியினை மேம்படுத்தும் வகையில் கிழக்குப் பகுதியில் செடி, கொடிகள் அகற்றுதல், பக்கவாட்டுச் சுவர், நடைபாதை, புல்தரை நடைபாதை, குடிநீர் வசதி, பசுமைப் பரப்பிற்காக மரம், செடி நடுதல், நுழைவு வாயில், கழிப்பறை, உணவு வழங்கும் அறை, முதலுதவி மையம், காத்திருப்பு கொட்டகை, தடுப்புச்சுவர், வாகன நிறுத்த வசதி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மின்வசதி உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் இரண்டு இருக்கைகள் கொண்ட 5 மிதி படகுகள், நான்கு இருக்கைகள் கொண்ட 5 FRP மிதி படகுகள், எட்டு இருக்கைகள் கொண்ட 5 மோட்டார் இயந்திர படகுகள் மற்றும் 2 ஜெட்ஸ்கி (Jetski) ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு HDPE படகு ஆகிய 18 புதிய படகுகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.
மணலி மண்டலம், வார்டு-20க்குட்பட்ட மணலி ஏரியில் அம்ரூத் 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 29 ஏக்கர் பரப்பளவில் 1,787 மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. தற்போது 1.2 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீர்த்தேக்கம் உடையதாக உள்ளது. இந்த ஏரியில் கரைகளைப் பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தூர்வாருதல், சுற்றுச்சுவர், ஏரிக்கு நீர்வரத்துக் கால்வாய்கள், வாகன நிறுத்த வசதி, இருக்கைகள், பசுமைப் பரப்பு, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, கைப்பிடிகள், மின்வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் இரண்டு இருக்கைகள் கொண்ட 5 மிதி படகுகள், நான்கு இருக்கைகள் கொண்ட 4 FRP மிதி படகுகள், எட்டு இருக்கைகள் கொண்ட 4 மோட்டார் இயந்திர படகுகள், 2 ஜெட்ஸ்கி (Jetski) ஸ்கூட்டர்கள் ஆகிய 15 புதிய படகுகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.
மணலி மண்டலம், வார்டு-21க்குட்பட்ட மணலி பாடசாலை தெருவில் மூலதன நிதியில் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. 2,510 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தில் 690 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் இந்த பேருந்து முனையம் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, காவல் துறையினர் அறை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அறை, பேருந்து நிறுத்தும் இடம், 48 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த இடம், பொதுக்கழிப்பிடம், முதல்தளத்தில் காத்திருப்பு அறை, 3 எண்ணிக்கையில் கடைகள் மற்றும் கழிப்பிடம், இரண்டாம் தளத்தில் 6 எண்ணிக்கையில் கடைகள் ஆகியவை கட்டப்படவுள்ளது.
மணலி மண்டலம், வார்டு-15க்குட்பட்ட மணலி புதுநகர் 80 அடி சாலையில் மூலதன நிதியில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டப்படவுள்ளது. இந்த சமுதாயக் கூடம் 630 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் அமைக்கப்படவுள்ளது. தரைத்தளத்தில் வாகன நிறுத்த வசதி, கழிப்பிடம், முதல் தளத்தில் உணவு உண்ணும் அறை, இரண்டாம் தளத்தில் கூட்டம் நடைபெறும் இடம், விழா மேடை, மணமகன் அறை, மணமகள் அறை ஆகியவை கட்டப்படவுள்ளது.
திருவொற்றியூர் மண்டலம், வார்டு-7க்குட்பட்ட சாத்தாங்காடு கிராமத்தில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் திருவொற்றியூர் பகுதியில் உள்ள தெருநாய்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு, உணவு வழங்கப்பட்டு, முதலுதவி வழங்கி, இனக்கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு 5 முதல் 6 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, திரும்ப பிடித்த இடத்தில் விடப்படும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.