குட் நியூஸ் சொன்ன அமைச்சர்..! அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏஐ பயிற்சி..!
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவு பயிற்சி மையத்திற்கான இணையதளத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். மேலும், அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் 3,560 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் அடிப்படை பயிற்சி முடித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், '' அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம். தற்போது மாதிரி பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி அளித்துள்ளது போல, அடுத்த கட்டமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 28,937 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் 'ஹைடெக்' லேப் வசதிகள் உள்ளன. எனவே நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்காக 'டிஎன் ஸ்பார்க்' என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். செயற்கை நுண்ணறிவில் மாணவர்கள் வல்லுநராக முடியும்.
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் இருப்பதே பெரிய விஷயமாக இருந்தது. கம்ப்யூட்டர் கணக்கு பார்ப்பதற்கான பெரிய கால்குலேட்டர் என நினைத்திருந்தோம். நான் பள்ளியில் படிக்கும் போது எனது வகுப்பில் 147 மாணவர்கள் இருந்தோம். அப்பொழுது கம்ப்யூட்டரை கண்காட்சி போல பார்த்தோம். அந்த கம்ப்யூட்டரில் உள்ள பட்டனை அழுத்தி பார்த்து ஏதாவது ஸ்கிரீனில் தெரிகிறதா? என பார்த்தோம். ஆனால் தற்பொழுது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைய சமுதாயத்திற்கு லேப்டாப் கொடுத்துள்ளார்.
பள்ளியளவில் ஏஐ பயிற்சி
காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் வளர வேண்டியுள்ளது. தற்பொழுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்துள்ளது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் இருந்து சாஃப்ட்வேர் உற்பத்தி செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வளர்ச்சியை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இது பள்ளி மாணவர்களுக்காகவே செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பள்ளியளவில் சொல்லிக் கொடுத்து விட்டால் கல்லூரிக்கு செல்லும் போது எளிதாக இருக்கும்.
அடுத்தபடியாக செமிகண்டக்டர் மிகவும் முக்கியமானது. செமிகண்டக்டர் இல்லாவிட்டால் தொழில்நுட்பம் பயன்படாது. இந்தியாவில் 19 பில்லியன் செமிகண்டக்டர் தேவைப்படுகிறது. அதில் 95 சதவீதம் இறக்குமதி தான் செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்திலேயே செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதற்காக அரசு 500 கோடி ஒதுக்கி உள்ளது.'' என தெரிவித்தார்.
அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ''மடிக்கணினி கொடுப்பது சினிமா பார்ப்பதற்காக அல்ல. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கும், தெரிந்து கொள்வதற்கும் தான். அதனால்தான் கல்லூரியில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குகிறோம்.'' என்றார்.