×

துப்புரவுப் பணியாளர்களுக்கு குட் நியூஸ்: விரைவில் 15,000 பணியாளர்களுக்கு தினமும் இலவச காலை உணவு..!

 

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் பிற நகராட்சிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம், தற்போது மாநிலம் முழுவதுமுள்ள பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இத்திட்டத்தைத் தொடங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக கடந்த வாரம் அனைத்துப் பேரூராட்சிகளிலும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

மிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் சுமார் 15,000 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறுவார்கள். வாரத்தின் ஏழு நாட்களும் இவர்களுக்குச் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, இட்லி, வடை, பொங்கல், ரவா கிச்சடி, ரவா உப்புமா மற்றும் சேமியா கிச்சடி என ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணவு எனச் சுழற்சி முறையில் மெனு மாற்றியமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான டெண்டர் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாக இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடைசி நிலையில் உள்ள பேரூராட்சிகளிலும் இதனைச் செயல்படுத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலம் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பணித்திறன் மேம்படும் என நம்பப்படுகிறது.