×

நீட் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு குட் நியூஸ்: 9 ரயில் நிலையங்களில் 'நீட் உதவி மையங்கள்' அமைப்பு!

 

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வானது ஜூன் 21ஆம் தேதி (NEET-UG) நாடெங்கும் நடைபெறுகிறது. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் விதமாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முக்கிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், வழக்கமான வாரநாட்களில் (Weekday) இயக்கப்படும் அட்டவணையின் படியே, புறநகர் ரயில் சேவைகள் தேர்வு நாளிலும் இயக்கப்படும். 

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்றுவரும் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் (Pre-NI Works) காரணமாக, சென்னை சென்ட்ரல், கடற்கரை - அரக்கோணம் - திருத்தணி வழித்தடத்தில் மட்டும் புறநகர் ரயில்கள் தற்போதுள்ள அட்டவணையின்படி (Existing Schedule) இயக்கப்படும்.

அதேபோல, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். இவை தவிர மற்ற அனைத்து சென்னை புறநகர் வழித்தடங்களிலும் வாரநாட்களுக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேக நீட் உதவி மையங்கள் (NEET Help Desks) அமைக்கப்படவுள்ளன.

இந்த உதவி மையங்கள் மூலம் ரயில்களின் விவரங்கள், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படும்.