வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! டிசம்பர் 31 முதல் 100 'ஸ்மார்ட் சிக்னல்கள்' அமல்!
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இணைந்து நகருக்குள் இருக்கும் சாலை சந்திப்புகளில் 100 ஸ்மார்ட் போக்குவரத்து சிக்னல்களை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் சிக்னல்கள் நிகழ்நேர போக்குவரத்தை அறிந்துகொண்டு, சிக்னல் நேரத்தை அதற்கேற்ப மாற்றியமைக்கும். பல இடங்களில் இதற்கான பணிகளும் ஆரம்பித்துவிட்டன.
சென்னையில் இந்த ஸ்மார்ட் சிக்னல்களுக்காக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு மற்றும் இணைய இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மஞ்சள் நிறத்திலான சிக்னல் கம்பங்கள் கேமரா உடன் பொருத்தப்பட உள்ளது. இது போக்குவரத்தை அலசும். மேலும், சாலை சந்திப்புகளில் வெவ்வேறு பகுதிகளில் எந்தளவிற்கு போக்குவரத்து இருக்கிறது என்பதை அலசும்.
சென்னையில் பெரும்பாலான இடங்களில், சாலையை கடக்க வாகனங்களோ, ஆட்களோ இல்லாத நேரத்திலும், சிவப்பு சிக்னல் பச்சைக்கு மாறுவதற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டும். இதனைத் தவிர்த்து, வாகன ஓட்டிகளின் நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தும் வகையில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிக்னலாக இது அறியப்படுகிறது.
முதற்கட்டமாக, சென்னையில் 100 இடங்களில் மஞ்சள் நிறத்திலான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களோ அல்லது ஆட்களோ சாலையை கடக்காத நேரத்தில், தானாகவே சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு சிக்னல் மாறிவிடும். குறிப்பாக, டெய்லர்ஸ் சாலை, சென்ட்ரல், பச்சையப்பா கல்லூரி உள்ளிட்ட இடங்களில் இதற்கான சோதனையும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 31ஆம் தேதி முதல் சென்னையில் 100 இடங்களில் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், போக்குவரத்து சிக்னலில் தேவையின்றி நேரம் விரையமாவது தவிர்க்கப்படும் என போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது. மக்களின் நேரம் மட்டுமின்றி மக்களின் எரிபொருளும் மிச்சப்படும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு இது தேவையான நடவடிக்கை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.