×

இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி: தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் குறைந்த விலையில் வெங்காயம்!

 

பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு நடவடிக்கையாக, கண்டா எனப்படும் சிறப்பு சரக்கு ரயில்களில் வெங்காயத்தை மத்திய அரசு முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தமிழகத்தில் பல சந்தைகளில் கிலோ வெங்காயம் விலை, 60 - 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 'நாபெட்' எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், முதல் கட்டமாக, 70,000 கிலோ வெங்காயம் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து கிடைத்ததும், மாநிலம் முழுதும் ரேஷன் கடைகளில் இந்த வெங்காயம் விற்கப்பட உள்ளது. ஒரு கிலோ, 30 ரூபாய் - 40 ரூபாய்க்குள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.