"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செம நியூஸ்!" – களமிறங்குகிறது 'சொல்! வெல்!' புதிய திட்டம்!
பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் வினாடி- வினா மன்றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடையாளத்துடன் வலுப்படுத்தப்பட்டு புதிய உற்சாகத்துடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவை விரிவுபடுத்துவது, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, தகவல்களை தொடர்படுத்தி சிந்திக்கும் திறனை உருவாக்குவது ஆகியவையே இம்மன்றத்தின் நோக்கங்களாகும்.
எனவே, வினாடி-வினா போட்டிகளில் பங்கேற்கும் சில மாணவர்களுக்காக மட்டுமின்றி 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரும் கேள்வி கேட்டு, கற்று, சிந்தித்து மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடையும் வகையில் இந்த மன்றத்தின் செயல்பாடுகள் அமைய வேண்டும். வினாடி- வினா மன்றச் செயல்பாடுகள் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் மற்றும் பயிற்சி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தரப்படுத்தப்பட்ட கற்றல் வளங்களை வடிவமைத்து ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வளங்களை ஒவ்வொரு வகுப்புக்கான வினாடி-வினா மன்றத்தின் பொறுப்பாசிரியர் பதிவிறக்கம் செய்து கொண்டு வினாடி- வினா மன்றப் பாடவேளையின் போது செயல்படுத்த வேண்டும். வினாடி-வினாவின் பல்வேறு கேள்வி வடிவங்கள், விநாடி- வினா நடத்தும் முறைகள் மற்றும் பல்வேறு சுற்றுகளுக்கு மாணவர்களைப் பள்ளி நிலையிலிருந்தே அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநில அளவிலான வினாடி-வினா போட்டிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் கேள்வி வடிவங்கள் மற்றும் சுற்றுகள், அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இல்லாமல், ஏற்கெனவே பள்ளி அளவிலேயே அறிமுகமாகி பயிற்சி பெற்ற ஒன்றாக அமைய வாய்ப்பாக இருக்கும். பள்ளிகளில் “சொல்! வெல்!’ வினாடி-வினா மன்றம், போட்டிக்கான பயிற்சி மையமாக மட்டுமின்றி கேள்வி கேட்கும், சிந்திக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்கும் கற்றல் தளமாக செயல்பட வேண்டும். இது தங்களது பள்ளியில் முனைப்புடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.