பத்திரப்பதிவு செய்வோருக்கு நற்செய்தி: ஆகஸ்ட் 27-ஆம் தேதி அனைத்து அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்!
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணி அவிட்டம் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்றுதான் பிராமணர்கள் உபாகர்மம் என்னும் பூணூல் வைபவத்தை நடத்துகின்றனர்.
இந்து மதத்தில் ரிக்,யசுர் வேதங்களை பின்பற்றுபவர்கள் அனுசரிக்கும் சம்பிரதாயம் இது. சாம வேதத்தை கடைபிடிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய முன்னோர்களுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வார்கள். தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தாங்கள் கற்ற வேதங்களை பாராயணம் செய்வார்கள்.
ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல உற்சவம் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது.
ஆவணி மாதத்தில் அவதரித்தவர்களாக விநாயகர், கிருஷ்ணர், சுவாமி தேசிகன் குமாரர் வரதாச்சாரியார், குலச் சிறையார், குங்கிலிய கலய நாயனார், இளையான்குடி மாறனார் ஆகியோர் கருதப்படுகின்றனர்.ஆவணி மாத திருவோண நட்சத்திரம் மகாபலி சக்கரவர்த்திக்கு உகந்த நாளாகக் கூறுகின்றனர். பகவான் வாமன அவதாரம் எடுத்தது இந்த நாள் ஆகும்.
ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி பூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பூணூலைக் கழற்றிவிட்டு, புதிய பூணூல் மாற்றிக் கொள்வர். இதற்கு அடுத்த நாள் காயத்ரி மந்திரத்தை லட்சம் முறை ஜபம் செய்து, தங்களின் ஆன்ம பலத்தையும், தெய்வ பலத்தையும் அதிகரித்துக் கொள்வார்கள்.ஆவணி அவிட்டம் ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மேலும் இது 'ஜனேயு பூர்ணிமா' அல்லது 'ஜந்தியால பூர்ணிமா' என்றும் அழைக்கப்படுகிறது.
ஆவணி அவிட்டம் பண்டிகையானது வேதக் கற்றலின் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்துப் புராணங்களின்படி, இந்த நாள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த நாளில்தான் விஷ்ணு பகவான் ஞானத்தின் கடவுளான ஹயக்ரீவராக அவதாரம் எடுத்தார். ஹயக்ரீவர்தான் பிரம்மனுக்கு வேதங்களை மீண்டும் அருளினார். இந்த நாள் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது .