×

குட் நியூஸ்..! இனி குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கலாம்..!!

 

வங்கியில் கணக்கு தொடங்குவது கூட சுலபம். ஆனால் அந்த கணக்கை பராமரிப்பது என்பது மிகவும் கடினம்.

இந்நிலையில், வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்க முடியாததால் ஏற்படும் அபராதத் தொகையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 'அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு' (Basic Savings Bank Deposit Account - BSBDA) எனும் ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தொடங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இக்கணக்கின் முக்கிய அம்சங்கள் மற்றும் வசதிகள்:

  • குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை: இந்த வங்கியைக் கணக்கைத் தொடங்குவதற்கு ஆரம்ப வைப்புத்தொகையோ (Initial Deposit) அல்லது தொடர்ந்து பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையோ தேவையில்லை.

  • இலவச வங்கிச் சேவைகள்: ஏடிஎம் / டெபிட் கார்டு (ATM/Debit Card), தொலைபேசி மற்றும் இணைய வங்கிச் சேவை (Internet & Phone Banking), கணக்குப் புத்தகம் (Passbook) மற்றும் காசோலைப் புத்தகம் (Cheque Book) உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளை வாடிக்கையாளர்கள் இலவசமாகவே பெற முடியும்.

  • கணக்கை மாற்றிக் கொள்ளும் வசதி: ஏற்கனவே சாதாரணச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும், தேவைப்பட்டால் அதை 'அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்காக' மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • அனைத்து வங்கிகளிலும் கிடைக்கும்: இச்சேவை அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து வணிக வங்கிகளிலும் தடையின்றி மக்களுக்குக் கிடைக்கும்.

ரிசர்வ் வங்கி வேண்டுகோள்:

வங்கிச் சேவைகளை நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்குத் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட RBI Kehta Hai என்ற ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடுமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.