×

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோவையில் 'உடான் யாத்ரி கபே' அறிமுகம்..!

 

கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சிற்றுண்டி வழங்கும் Udaan Yatri Cafe, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கோவைக்கு நேரடி சர்வதேச இணைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப விமான நிலையமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால், கோவை மாநகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தஞ்சாவூர், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு உரிய முன்அனுமதி வழங்கி உள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி வழங்கும் 'Udaan Yatri Cafe' திறக்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் ஜி.ஐ. டேக் பெற்ற பொருட்கள் விற்பனை, கோவை கோரா காட்டன் விற்பனை நிலையம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவை இதில் அடங்கும். இந்த வசதிகள் மூலம் கோவை விமான நிலையத்தின் சேவை மேம்படுத்தப்படும் என விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிஃப் தெரிவித்தார்.

 

கோவை விமான நிலையத்தில் நாள்தோறும் 28 முதல் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர்விஸ்டா போன்ற விமான நிறுவனங்கள் இங்கு சேவை வழங்குகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூர், அகமதாபாத், சிங்கப்பூர், சார்ஜா போன்ற நகரங்களுக்கு கோவையிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பயணிகளின் சேவையை மேம்படுத்த இது உதவும் என்றும் இயக்குனர் முகமது ஆரிஃப் கூறினார்.புதிதாக திறக்கப்படும் 'Udaan Yatri Cafe'யில் பயணிகளுக்கு குறைந்த விலையில் குடிநீர், டீ, வடை, அதிரசம் போன்ற சிற்றுண்டிகள் கிடைக்கும். மேலும், அந்தந்தப் பகுதிகளில் ஜி.ஐ. டேக் பெற்ற சிறப்புப் பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை செய்ய ஒரு விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. கோவையின் பெருமைக்குரிய ஜி.ஐ. டேக் பெற்ற கோவை கோரா காட்டன் விற்பனை நிலையமும் இன்று திறக்கப்பட்டது.

பயணிகளின் குழந்தைகளுக்காக ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியும், பயணிகளின் ஓய்வுக்காக ஒரு நூலக வசதியும் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை மத்திய அமைச்சர்கள் காணொளி மூலமாகவும் துவக்கி வைத்தனர். இது தமிழகத்தின் மேற்குப் பகுதியின் முக்கிய விமான நிலையமான கோவை விமான நிலையத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றும், பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்கும் என்றும் இயக்குனர் தெரிவித்தார். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடுதல் வசதிகளை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.