குட் நியூஸ்..! இன்றே அரசு ஊழியர்களுக்கு சம்பளம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசு..!!
தமிழக அரசின் நிதித் துறை செயலாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான சித்திக் சார்பில் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாகவும், இதனால் அந்த நாட்களில் வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செப்டம்பர் 25-ம் தேதியே (இன்று) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள வங்கி வேலைநிறுத்தம் மட்டுமின்றி, அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை நாளைய தினமே வழங்கும் வகையில் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வாரியங்கள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களும் அடங்கும்" என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் அனைத்து சம்பளக் கணக்கு அலுவலர்கள், சார்நிலை சம்பளக் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இம்மாதத்திற்கான அனைத்து மாதாந்திர ஊதியம், தினக்கூலி மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களுக்கான மின்னணு தீர்வினை, மாத இறுதி நாளான செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 25 ஆம் தேதியே வழங்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வாரத்துக்கு 5 நாள் வேலை நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதால், வங்கி சேவைகளும், பணப்பரிவர்த்தனைகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.