×

குட் நியூஸ்..! ரூ.10 லட்சம் வரை ஈஸியாக கடன் பெறலாம் - தமிழக அரசு புதிய சட்டம் அமல்! 

 

தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதாகக் கடன் பெறுவதை உறுதி செய்யும் வகையில், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைத் தடுப்புச் சட்ட விதிகளை உருவாக்கி அமல்படுத்தியுள்ளது.

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் தமிழக சட்டப்பேரவையில் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, இந்தச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இது பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

புதிய விதிகளின்படி, கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையையும் செப்டம்பர் 30 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பதிவுகள் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும். இது கடன் நடவடிக்கைகளைச் சிறப்பாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்.

மிக முக்கியமாக, தனிநபர்களுக்கு ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்குப் பொதுமக்களிடம் இருந்து பிணையம் (Guarantee/Security) எதுவும் பெறக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன்களுக்குப் பிணையம் எதுவும் பெறக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறுவது மிகவும் எளிதாகிவிட்டது.

மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெறுவதற்கு, அந்தக் குழு 6 மாதங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். 18 முதல் 70 வயதுடைய பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள் ஆகியோருக்கு இந்தக் குழுக்களில் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும். இதன் செயல்பாட்டைக் கொண்டு வங்கி, கடனுக்கான தகுதியை உறுதி செய்யும். வியாபாரம் அல்லது வேறு தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்கள், சுய உதவிக் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து, குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை எளிதாகக் கடன் பெற முடியும்.