☰
×

குட் நியூஸ்..! குடும்ப தலைவிகளுக்கு கூடுதலாக ரூ.8,625 கிடைக்கும் - தமிழக அரசு அறிவிப்பு..! 

 

விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் (VB-G RAM G) கீழ் ஏற்கெனவே வழங்கப்படும் 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய தகுதியுள்ள குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2026–27ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மத்திய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க (ஊரகம்) சட்டம், 2025-ன் கீழ் பதிவுச் செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களில் திறன்சாரா உடல் உழைப்புப் பணிகளைச் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், நடப்பாண்டில் ஜூலை 01- ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து வழங்குகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், தனிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், எஸ்சி, எஸ்டி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் என ஆறு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, 2026–27ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்ய நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'வெற்றி 150' இத்திட்டத்தின் மூலம் 25 நாள்கள் கூடுதலாக பணி கிடைத்தால் நாளொன்றுக்கு ₹345 ஊதியம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ₹8,625 கூடுதலாக கிடைக்கும். இதனால், குடும்பத் தலைவிகள் பயன்பெறுவர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தவெகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.