குட் நியூஸ்..! விரைவில் ஏ.டி.எம்., வழியே ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்..!
ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எடை குறைவு, கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, கடை ஊழியர்கள் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட முறை கேடுகள் நடக்கின்றன.
இவற்றை தடுக்க, 'டிஜிட்டல்' முறையில், உணவுப் பொருட்களை வாங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக, இத்திட்டம் குஜராத் மாநிலத்தில், சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு தரப்பில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான கூப்பன், சம்பந்தப்பட்ட நபர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அவர் ரேஷன் கடைக்கு சென்று, தனது மொபைல் போனுக்கு வந்த கூப்பனை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.
இது தவிர, மக்கள் 24 மணி நேரமும், பொருட்கள் வாங்க வசதியாக, ஏ.டி.எம்., இயந்திரம் போல், 'அன்னபூர்ணா' என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரேஷன் பொருட்கள், பாக்கெட்டில் வைக்கப்படும். இயந்திரத்தில் கருவிழி, விரல் ரேகை போன்றவற்றை பதிவு செய்து, பொருட்களை எடுக்க அனுமதிக்கப்படும். இயந்திரத்தில், 'கியூ.ஆர்.,கோடு' குறியீடு இருக்கும். அதை பயன்படுத்தியும் பொருட்களை வாங்க முடியும்.
இந்த இயந்திரத்தில், 35 வினாடிகளில், 25 கிலோ பொருட்களை பெற முடியும். இத்திட்டம் விரைவில், நாடு முழுதும் நடைமுறைக்கு வர உள்ளது.