×

குட் நியூஸ்..! பாரதிதாசனுக்கு உதவித்தொகை விடுவிப்பு..! 

 

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிதாசன், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை தொடர்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை மூலம் தனது படிப்பைத் தொடர்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  தனது நிலை குறித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. கல்வி உதவித்தொகை கிடைக்காததால் வெளிநாட்டில் படிப்பை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.நிதி நெருக்கடி தன்னை மனரீதியாக பாதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மாணவரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர் பாரதிதாசனின் படிப்பு தொடர தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என உறுதி அளித்திருந்தார்.மேலும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.12.21 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ரூ.23.95 லட்சமும் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டது.தற்போது நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், அவரது ஆராய்ச்சிப் படிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான தடைகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.