குட் நியூஸ்..! சென்னை - திருச்சி செல்ல இனி வெறும் 3 மணி நேரம்!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை (NHAI) தனது புதிய பசுமை வழி விரைவுச்சாலை (Greenfield Expressway) திட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. சுமார் 300 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அதிவேகச் சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னைக்கும் திருச்சிக்கும் இடையேயான பயண நேரம் வெறும் 3 மணி நேரமாகக் குறையும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், தமிழ்நாட்டின் 2-வது தேசிய விரைவுச்சாலையாக அமையும். இதற்கு முன்பு சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் பயணிக்க முடியும். தற்போது சென்னை-திருச்சி இடையே பயணம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும் நிலையில், புதிய விரைவுச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும். இந்த விரைவுச்சாலை 12 மாவட்டங்கள் வழியாக செல்லும். இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகளு டன் அமைக்கப்படும்.
திட்ட விபரங்கள் ஒரு பார்வையில்:
- ஒட்டுமொத்த நீளம்: 300 கிலோமீட்டர்
- திட்ட மதிப்பு: ₹20,000 கோடி
- சாலையின் கட்டமைப்பு: 6 வழிச் சாலை (Six-lane Corridor)
- அனுமதிக்கப்படும் வேகம்: மணிக்கு 120 கிலோமீட்டர் (120kmph)
- தேவைப்படும் நிலத்தின் அகலம் (Right of Way): 90 மீட்டர்
- கடந்து செல்லும் மாவட்டங்கள்: 12 மாவட்டங்கள்
இது முற்றிலும் புதிய வழித்தடத்தில் அமைக்கப்படும் பசுமை வழித் திட்டம் (Greenfield Project) என்பதால், இந்தச் சாலையின் சில பகுதிகள் அடர்ந்த காடுகள் மற்றும் குன்றுகள் நிறைந்த பகுதிகள் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெறுவதே இத்திட்டத்தின் மிக முக்கிய சவாலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், மாநில அரசு இத்திட்டத்திற்கு முழு ஆதரவையும் முன்னுரிமையையும் உறுதி அளித்துள்ளதால், அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து சட்டப்பூர்வ மற்றும் காகிதப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.