குட் நியூஸ்..! இனி 700 இல்லை.. 100 மட்டுமே..! மறுமதிப்பீடு கட்டணம் குறைப்பு..!
மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விடைத்தாள்களை ஸ்கேன் செய்ததில் குறைபாடுகள் மற்றும் மதிப்பெண் வழங்குவதில் குளறுபடிகள் இருப்பதாகவும் மாணவர்கள் மத்தியில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.
எனினும் மாணவர்களுக்கு தங்கள் தேர்வு முடிவில், திருப்தி இல்லையெனில், மறுகூட்டல், திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிடுதல் மற்றும் மறுமதிப்பீடு கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு & நகல் பெறுவதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டண அமைப்பின்படி, மாணவர்கள் தங்களது விடைத்தாளின் ஸ்கேன் நகலைப் பெற இனி வெறும் 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதேபோல், மதிப்பெண்களை சரிபார்ப்பதற்கும் தனியாக 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் உள்ள ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்யக் கோரி சவால் செய்ய விரும்பினால், ஒவ்வொரு கேள்விக்கும் தலா 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
முன்பு விடைத்தாளின் நகலை பெறுவதற்கு மாணவர்கள் 700 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது, 100 செலுத்தினாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம் 500-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.
இதற்கு முன்னதாக, விடைத்தாளின் நகலைப் பெற 700 ரூபாயும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு 500 ரூபாயும், ஒவ்வொரு கேள்வியையும் மறுமதிப்பீடு செய்ய 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்டணம் ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.