குட் நியூஸ்..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், 1.7.2025 தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை, மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ந் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 1.7.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும், இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அதுதொடர்பான அரசாணையை நேற்று வெளியிட்டார். அதில், கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை, உத்தரவிடப்பட்ட விகிதத்தில் பெற்று, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.