×

குட் நியூஸ்..! 10 ஆண்டுகளாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம் - அரசாணை வெளியீடு..! 

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில்  பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் இருந்த பணியிடங்களுக்கு பெரிய தீர்வு கிடைத்துள்ளது. மொத்தம் 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக  மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கை 10 ஆண்டுகளுக் கும் மேலாக நீடித்து வந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பின்வரும் பணியிடங்கள் இனி நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரும்:

முதுநிலை ஆசிரியர்கள்: 6,451 இடங்கள்

பட்டதாரி ஆசிரியர்கள்: 664 இடங்கள்

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்: 219 இடங்கள்

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்: 107 இடங்கள்

முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள்: 31 இடங்கள்

உடற்கல்வி இயக்குநர் (நிலை-1): 26 இடங்கள்

இணை இயக்குநர் (நாட்டு நலப் பணித் திட்டம்): 1 இடம்

மற்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு:

ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமின்றி, நிர்வாக ரீதியிலான மற்ற பணியிடங்களுக்கும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர், அலுவலக உதவியாளர்கள் (119), கண்காணிப்பாளர்கள் (35) உள்ளிட்ட 351 பணியிடங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 560 பணியிடங்கள் 'ஒழிவடையும் பணியிடங்களாக' அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களில் தற்போது பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் வரை அவை நீட்டிக்கப்படும், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்தப் பணியிடங்கள் சரண் செய்யப்படும்.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன் வெளியிட்டுள்ள இந்த அரசாணை, பல ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியில் இருந்து வந்த ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. .

இந்த அரசாணை மூலம்:    பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி நிலைத்தன்மை கிடைக்கும்     ஊதியம், சேவை பாதுகாப்பு உள்ளிட்ட பல நலன்கள் கிடைக்கும். எதிர்கால பதவி உயர்வுகளுக்கும் வாய்ப்பு உருவாகும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆசிரியர் பணி நிரந்தர கோரிக்கைக்கு முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.