குட் நியூஸ்..! இனி ஹோட்டல்களில் சேவை கட்டணம் (Service Charge) வசூலிக்க முடியாது..!
நம் நாட்டில் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் உணவு கட்டணத்துடன் சேவை கட்டணம் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இதற்கு எதிராக வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன.
கடந்த, 2022 ஜூலையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் தானாகவோ, கட்டாயமாகவோ சேவை கட்டணத்தை உணவு ரசீதில் சேர்க்க கூடாது என வழிகாட்டுதல்களை வெளியிட்டது.இதை எதிர்த்து, தேசிய உணவக சங்கம் மற்றும் இந்திய ஹோட்டல், உணவக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
'சேவை கட்டணம் வசூலிப்பது, 80 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தொழில்துறை வழக்கம். இது ஊழியர்களுடனான ஊதிய ஒப்பந்தங்களுடன் தொடர்புடையது' என்றும் அவர்கள் வாதிட்டனர்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த மார்ச் 28ல் பிறப்பித்த உத்தரவில், 'சேவை கட்டணம் கட்டாயமின்றி விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களை கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ன்படி நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.
'சேவை கட்டணம் என்பது அரசு வரி என வாடிக்கையாளர்கள் தவறாக கருத வாய்ப்புள்ளதால், அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், 'விருப்ப நன்கொடை' அல்லது 'ஊழியர் நல நிதி' போன்ற தெளிவான பெயர்களைப் பயன்படுத்த வேண்டும்' என கூறினார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உணவக சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள், டில்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சர்மா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.அவர்கள் கட்டாய சேவை கட்டணதுக்கு தனி நீதிபதி விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.