×

குட் நியூஸ்..! 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு..! 

 

முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.

முதியோர்- மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொது மக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைகின்றனர். ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.