×

குட் நியூஸ்..!! இனி ஒவ்வொரு மாநிலத்திலும், 'மெடிக்கல் ஹப்' - லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் உறுதி..!!

 

லோக்சபாவில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை தந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

மெகா உணவு பூங்காக்கள், ஐ.டி., பூங்காக்கள், 'ஸ்மார்ட் சிட்டி'கள், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை அமைக்க, மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கல்வி பயிலும் மாணவியரை ஊக்குவிக்க, விடுதிகள் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

கல்வித் துறையின் அனைத்து மட்டங்களிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலங்களுக்கு, 25.44 லட்சம் கோடி ரூபாயை நிதியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிக்குழுவின் வழிமுறையின்படி, இந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படும்.

மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. பட்ஜெட்டில், 'பயோ பார்மசூட்டிகல்' துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும், 'மெடிக்கல் ஹப்' ஏற்படுத்தப்படும். இதன் மூலம், அந்த பகுதிகளில் மருத்துவக் கல்வி, மருத்துவமனைகள் என போதிய வசதிகள் உருவாக்கப்படும்.

ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு விரும்புகிறது. விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படும். மெகா தொழில் துறை பூங்காக்களையும் அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இவ்வாறு பேசினார். -