குட் நியூஸ்..!! நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசி 2027ல் இந்தியாவில் அறிமுகம்..!
ஹைதராபாத்தை மையமாக கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம், டகேடா பார்ம்சூட்டிகல்ஸ் ஆகியவை க்யூடெங்கா (Qdenga) என்ற பெயரில் நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசியை 2027ம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகப்படுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து டகேடா பார்மசூட்டிகல்ஸ் நிறுவன தலைவர் மகேந்தர் நாயக் கூறியதாவது; ஜூலை மாதத்தில் தடுப்பூசியை சந்தைப்படுத்தும் அங்கீகாரத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. வணிக ரீதியாக விநியோகம் தொடங்கும் முன்பு, மற்ற நடைமுறைகளை நிறைவு செய்வதே இப்போதுள்ள எங்களின் முன்னுரிமையாக உள்ளது. தற்போதுள்ள சூழலில் தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து ஊகிக்க முற்படுவது அவசரமான ஒன்று.
இந்தியாவில் நோய் தடுப்புத் திட்டத்தில் இதை சேர்ப்பது ஒரு நீண்டகால இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.4 முதல் 60 வயது வரையுள்ள நபர்களுக்காக மத்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து 2026ம் ஆண்டு ஜுலையில் க்யூடெங்காவை சந்தைப்படுத்தும் அங்கீகாரத்தை இந்தியா வழங்கியது.
இந்த தடுப்பூசியானது, 3 மாதம் இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்தப்படுகிறது.