குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.1,200 குறைவு..!!
May 28, 2026, 10:03 IST
ஈரான் - அமெரிக்கா இடையேயான போருக்கு முன்பே தங்கம் விலை தாறுமாறான மாற்றத்தை கண்டு வந்தது. கடந்த ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்த நிலையில், ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டியது. இந்த விலை உயர்வும் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு பாதிக்குள் ஒரு சவரன் ரூ. 2 லட்சத்தை தொடும் என்றும் கூறியிருந்தனர்.
அதற்கேற்றாற்போல், இந்த ஆண்டு தொடக்கத்தில் மடமடவென உயரந்த தங்கம் விலையானது, பிப்ரவரி மாத கடைசியிலிருந்து தலைகீழாக மாறியிருக்கிறது. பொதுவாக போர்க்காலங்களில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை தவிர்த்து பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். ஆனால் ஈரான் போரின் காரணமாக முதலீட்டாளர்கள் எதன் மீதும் முதலீடு செய்யாமல் தவிர்த்தனர். இதனால் தங்கம் விலை குறைய ஆரம்பித்து, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக விலை சரிவு தொடர்ந்து வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,650க்கு விற்பனை செய்யப்பட்டது ஒரு சவரன் ரூ. 1,17,200க்கு விற்பனை.
இன்று (மே 28) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 குறைந்து, ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.285-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,85,000-க்கு விற்பனையாகிறது