குட் நியூஸ்..!! ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் வசதி மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு..!!
பொதுமக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை myAadhaar இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது ஒன்றிய அரசு..
ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை 'myAadhaar' இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை கடந்த 13ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இந்த இலவச சேவை வரும் ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி தங்களின் விவரங்களை ஆன்லைனில் எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த அறிவிப்புடன் சேர்த்து, மொபைல் செயலிகளிலும் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த பழைய 'mAadhaar' செயலி விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.
அதற்குப் பதிலாக, மிகவும் எளிமையான மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட புதிய 'Aadhaar' செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புதிய செயலியில் பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீடு மூலம் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய செயலி ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (iOS) ஆகிய இரண்டு தளங்களிலும் இலவசமாகக் கிடைக்கிறது.