×

தங்க மோதிரங்கள் பாதுகாப்பு: 107 மையங்களில் அதிநவீன பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்க உத்தரவு..!!

 

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்குகிறது; இந்த திட்டத்தில் தயார் செய்யப்படும் தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக மாநிலத்தில் 107 மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டம் செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னதாகவே பாதுகாப்பு பெட்டகம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறையைச் சுகாதாரத் துறைச் செயலாளர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எஃகு அலமாரிகளைச் சுற்றி எஃகு கம்பி வலை அமைப்புகள், தரை மற்றும் சுவருடன் உறுதியாகப் பொருத்தப்பட்ட அலமாரிகள் மற்றும் பூட்டக்கூடிய கதவுகள் ஆகியவற்றை தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. 3 பக்கங்களிலும் கட்டடங்களால் சூழப்பட்ட பாதுகாப்பான சேமிப்பு அறை, மூடப்பட்ட ஜன்னல்கள் மற்றும் சிமெண்ட், கான்கிரீட் மூலம் தரை மற்றும் சுவருடன் உறுதியாகப் பொருத்தப்பட்ட அலமாரி ஆகியவை அடங்கும்.

அலமாரியின் மேற்பகுதி மற்றும் இரு பக்கங்களை மூடியிருக்கும்.முன்புறத்தில் திறக்கக்கூடிய வகையிலான 'மைல்ட் ஸ்டீல்' கம்பி வலைக் கதவு அமைக்கப்பட்டிருக்கும். தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இத்திட்டத்தைச் தடையின்றிச் செயல்படுத்தவும், இப்பணியை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விரைவாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு, அனைத்து மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. 107 மையங்களில் இருந்து, அரசு மருத்துவமனையில் பிறக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு பச்சிளம் குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.