தொடர் சரிவில் தங்கம் விலை.. 3 நாட்களில் ரூ.1,320 குறைந்தது..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து விற்பனையாகிறது.
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. சர்வதேச சந்தை மற்றும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை அவ்வப்போது சற்று குறைவது போல போக்கு காட்டி வருகிறது. மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.73,880க்கு விற்பனையானது.
தொடர்ந்து இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்திருக்கிறது. கடந்த திங்கள் கிழமையன்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ. 9,155க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்திருக்கிறது. இன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 85 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.9,070க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 119க்கு விற்பனையாகிறது.