தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது..!!
Updated: May 11, 2026, 10:10 IST
2025ஆம் ஆண்டு தொடங்கியது முதலாகவே, தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை கண்டு வந்தது. அதன் விளைவாக கடந்த ஆண்டில் இறுதியில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை கடந்தது. இந்த விலையேற்றமானது வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு பாதிக்குள் ஒரு சவரன் ரூ. 2 லட்சத்தை தொடலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா - ஈரான் இடையே மூண்ட போரானது நிபுணர்களின் கருத்தை மாற்றியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகள் தங்கள் கையிருப்பு தங்கத்தையும் விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை குறையத் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, உலக வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படுகிற அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்கள் லாபம் பெறும் நோக்கில் டாலர் முதலீடுகளின்மீது தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் 3% சரிவை சந்தித்திருக்கிறது.
அந்த வகையில் சென்னையில் நேற்று (மே 10) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,150க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.285-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,85,000-க்கு விற்பனையாகிறது.