×

“கட்சி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்”- செங்கோட்டையன் மீது அதிமுக நிர்வாகி பரபரப்பு புகார்

 

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தரப்பினர் கட்டாயப்படுத்தியே கட்சி பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக நிர்வாகி குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கடந்த 5ம் தேதி எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு வைக்கும் அளவிற்கு மாறியது. அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த கழக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி, அவரது ஆதரவாளர்கள் வகித்து வந்த ஒன்றிய செயலாளர், பேரூர் கழக செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்த முன்னாள் எம்.பி.சத்தியபாமா உள்ளிட்ட 9 பேரின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கோபி, நம்பியூர் ஒன்றியம் மற்றும் நகர பகுதியில் இருந்து 2,000 க்கும் மேற்பட்டோர் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் இன்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர் செந்தில் பாலாஜி,  “எடப்பாடி பழனிச்சாமி யாரை கைகாட்டுகிறாரோ அவரை வெற்றி பெற வைக்க பாடுபடுவோம். அனைவரும் முழு மனதுடன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் பணியாற்றவே விரும்புகிறோம். கட்சியில் இருந்து யாரும் ராஜினாமா செய்ய விரும்பவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தியே ராஜினாமா செய்ய வைத்தனர். கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினர்” எனக் குற்றம் சாட்டினார்.