☰
×

உடனே உங்க ரேஷன் கடைக்கு போங்க..! ரேஷன் கடைகளில் 1 கிலோ வெங்காயம் ₹35-க்கு விற்பனை!

 

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலமும், இரண்டாவது கட்டமாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்தும் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்டமாக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு போக்குவரத்து மூலமாக மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்சியாக, அக்டோபர் 10 முதல் சென்னையிலும், அக்டோபர் 11 முதல் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் வெங்காயத்தை பெற்று பயன்பெறலாம்.

இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.

அதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.