“விஜய் சொன்னதுதான் உண்மை... எல்லாமே வதந்தி”- ஜி.கே.வாசன்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சொன்னதுதான் உண்மை, கூட்டணி தொடர்பாக பேசியது வதந்தி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், “தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரும், அதற்குப் பிறகு தொகுதி பங்கீடு நடைபெறும், இதற்கிடையே தொகுதி பங்கீடு, எண்ணிக்கை குறித்து சில தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகள் தவறான செய்தி, கூட்டணியை பலவீனப்படுத்தக்கூடிய செய்தியாக உள்ளது. கூட்டணியை விரும்பாதவர்கள் கூறும் செய்தியாக உள்ளது.
அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் பேசும் போது தான் எத்தனை தொகுதிகள் என்பதெல்லாம் வெளிவரும். கூட்டணி கட்சித் தலைவர்களோடு பேசும்போது தான் அதிகாரப்பூர்வமாக இருக்கும். என்டிஏ அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுகிறது. திமுகவின் மக்கள் விரோத போக்கு எதிர்மறை வாக்கை தமிழகத்தில் அதிகரிக்கச் செய்துள்ளது.அதன் அடிப்படையில் எங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். தொகுதி பங்கீடு குறித்து பேசும்போது எல்லா கட்சிகளும் பலத்திற்கு ஏற்றவாறு மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் பேசி சுமுகமான முறையில் தொகுதி பங்கீட்டில் தீர்வு ஏற்படும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சொன்னதுதான் உண்மை, கூட்டணி தொடர்பாக பேசியது வதந்தி” என்றார்.