×

"ஜன.20 வரை டாஸ்மாக் மூடல்" - முக்கிய புள்ளி திடீர் கோரிக்கை... மதுப்பிரியர்கள் ஷாக்!

 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழவதும் தற்பொழுது கரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இவை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவின் மூன்றாவது அலை பரவாமல் இருப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இருப்பது நல்ல செய்தி. அதோடு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து இருப்பதும், வழிப்பாட்டு தலங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் மூடுவதும் மற்றும் திரையரங்குகள் உணவு கூடங்களில் 50% பேரும், திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் குறைந்த அளவு நபர்கள் கலந்துகொள்ளவும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. 

தற்பொழுது தமிழகத்தில் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறைகள் வருகிறது. அதனால் மதுக்கடைகளில் அதிகமாக மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே, ஜனவரி 20ஆம் தேதி வரை மதுக்கடைகளை முழுவதுமாக மூடவேண்டும். அப்பொழுதுதான் அரசு எடுக்கும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கான அனைத்து முயற்சிகளும் 100 சதவீதம் பயனளிக்கும். தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும். அதிகமாக பரவினால் ஏற்பட்டால் முழுமையாக தொற்று குறையும் வரை மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.