"என் பணத்தை மீட்டு தாருங்கள்!" – ஆம்புலன்ஸில் வந்து பெண் கண்ணீர் புகார்!
சென்னை பட்டாபிராம், அண்ணாநகர், 8-வது தெருவைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது எதிர்காலத் தேவைக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் சேமித்த பணத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் திருமணி என்பவர் வீடு கட்ட பணம் தேவைப்படுவதாக கேட்டுள்ளார். தனக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு (Kidney Transplantation) இந்தப் பணம் தேவை எனக்கூறிய ஜெயந்தி, ஆரம்பத்தில் பணம் தர மறுத்துள்ளார்.
இருப்பினும், பணத்தை விரைவில் திருப்பித் தருவதாகக் கூறி திருமணி தொடர்ந்து வற்புறுத்தியதால், ஜெயந்தி தனது சார்பில் ரூபாய் 4 லட்சமும், தனது சகோதரி பரிமளா மூலம் ரூபாய் 6 லட்சம் என மொத்தம் ரூபாய் 10 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், வீடு கட்டி முடித்த பிறகும் திருமணி பணத்தைத் திருப்பித் தரவில்லை. பலமுறைக் கேட்டும் ரூபாய் 30,000 மட்டுமே திருப்பிக் கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையான ரூபாய் 9,70,000 பணத்தைத் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஆஜரான திருமணி, பணத்தைப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். இருப்பினும், இதுவரை அவர் பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
தற்போது ஜெயந்திக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்று வருவதோடு, உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசர நிலையில் உள்ளது. அதேபோல், இவரது சகோதரி பரிமளாவும், முதுகெலும்பு அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவச் சிகிச்சையில் உள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில், ஆவடி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்ட ஜெயந்தி, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். ஆம்புலன்ஸில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணியிடம் தான் வழங்கிய தொகையை விரைந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெயந்தியின் சகோதரரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பக்கத்து வீடு என்பதனால் பணம் கொடுத்து உதவினோம். எனது சகோதரிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. கண் பார்வையும் போய்விட்டது. திருமணி தர வேண்டிய பணத்தை எப்படியாவது பெற்றுக் கொடுங்கள். அவர் எங்களிடம் பணம் வாங்கி மூன்று வருடங்கள் ஆகின்றது. அந்த பணத்தைப் பெற்றுக் கொடுத்தால் தான் எனது சகோதரியைக் காப்பாற்ற முடியும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.