☰
×

சிறுமி மாயம்.. மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு..!!

 

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதி.

இவர்களின் 2-வது மகள் 7 வயது சிறுமி. கடந்த மாதம் 11-ந் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமானார்.

முதலில் இந்த வழக்கை சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படை அமைத்து தேடினர். எந்த துப்பும் கிடைக்காததை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 22 நாட்களுக்கும் மேலாக ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் நேற்று ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் வந்து சிறுமியின் தந்தை வடிவேலு, தாய் பவானி, பாட்டி மற்றும் எதிர்வீட்டுப் பெண் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றார்.

இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் சென்றார். அங்கு விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோரிடம் இதுவரை வழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் செஞ்சி அடுத்த சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் சிறுமியை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது சிறுமி மாயமான பகுதியில் உள்ள பரதன் தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்பு கூடு கண்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட எலும்பு கூடு யாருடையது? என்பது குறித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவாடி காப்பு காடு பகுதியில் மேலும் சிறு தடயங்கள் கிடைக்குமா என்று சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சிறுவாடி காட்டுப் பகுதியில் உள்ள புதர்கள், பாறை இடுக்குகள் என ஒவ்வொரு இடமாக சல்லடை போட்டு தேடினர். அப்போது, ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தை பார்த்தனர்.

உடனடியாக போலீசார் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். பின்னர் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர்.

இன்றுடன் சிறுமி மாயமாகி 34 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் சிறுமி பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பரதன்தாங்கல் ஏரி அருகே முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 50 வயதுடைய ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

மேலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடின் அருகே வேட்டி, சட்டை, மதுபாட்டில் மற்றும் விஷ பாட்டில், செருப்பு ஒன்றும் கிடந்துள்ளது.

அத்துடன் அந்த மதுபாட்டில் கீழ்பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு முன்பாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.