அவர்களை உடனே கட்சியை விட்டு தூக்குங்க! - தவெக தலைவர் விஜய்க்கு அர்ஜுனமூர்த்தி காரசார கடிதம்!
அவர் தனது கடிதத்தில்,' அன்புள்ள திரு.விஜய் அவர்களுக்கு,வணக்கம்.தங்களின் அரசியல் தொடக்கம் தமிழகம் முழுவதும் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தியுள்ள ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலில் புதிய குரல்கள் எழுவது ஜனநாயகத்திற்கு நல்லதே.ஆனால் அந்த ஆரம்ப உற்சாகம் அரசியல் புரிதல்,அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமான உண்மை.
தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக திரு.ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர்."நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழி போல,தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் அவர்கள் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அது அறிவு,அனுபவம் மற்றும் பணிவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும்.அரைகுறை அரசியல் புரிதலுடன் பேசும் நபர்களை சுட்சி நிர்வாகத்தில் வைத்துக் கொள்வது எந்த தலைவருக்கும் பலமாக இருக்காது; அது காலப்போக்கில் பெரிய அரசியல் சுமையாக (liability) மாறும்.
அதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றால், அவரது செயல்பாடுகள் காரணமாக திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் கட்சி இருந்த கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவு. அந்த அரசியல் சூழ்நிலையே பின்னர் அவரை தங்கள் கட்சியில் சேரும் நிலைக்கு தள்ளியது என்பதை தமிழகம் முழுவதும் அறிந்ததே," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ரஜினிகாந்தின் அரசியல் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் விமர்சன பேச்சுக்கு தமது கடிதத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி குறிப்பிடுகையில், 'குறிப்பாக, தமிழ் மக்களின் மனதில் மிகுந்த மரியாதையும் பாசமும் பெற்றிருக்கும் நம் அன்புத் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களை குறைத்து பேசுவது, ஒருவரை உயர்த்தாது. அது தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டுமே புண்படுத்தும்.
திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் அதிகாரம் பெற்றவர் அல்லாத நேரங்களிலும், துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர்.அவரது வாழ்க்கையில் இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன: ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்திருந்த சூழலில் கூட அவர் "ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று கூறி அரசியல் நிலையை சுட்டிக்காட்டினார். அந்த கருத்துக்காக அவர் பல விமர்சனங்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.
இருந்தாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கொண்டிருந்தார். இந்தியாவிலும் உலக அரங்கிலும் பல தலைவர்களின் மரியாதையைப் பெற்றவர்.அவரைப் போன்ற நபரை குறைத்து பேசுவதன் மூலம் யாரும் உயர்வதில்லை.மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும் என்பது அரசியலின் அடிப்படை உண்மை.
எனவே, தங்களின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால், தங்களின் சுற்றத்தில் உள்ள அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை உடன் கட்சியை விட்டு விலக்கி, அரசியல் நாகரிகத்தையும் பொறுப்பையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
இல்லையெனில், தமிழ் மக்களின் மனதில் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும். தமிழக அரசியல் உயர வேண்டும் என்றால்,பொறுப்பான அரசியல் மொழி தான் பிரிவினை,இகழ்ச்சி மொழி அல்ல தேவை.' என்று விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் அர்ஜுனமூர்த்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.