ரயில் கடக்கும் போது கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் சஸ்பெண்ட்!
திருவண்ணாமலை அருகே கவனக்குறைவாக செயல்பட்ட ரயில்வே கேட் கீப்பர் ராமு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த தண்டரை ரயில்வே நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை அருகே தண்டரை - திருக்கோவிலூர் இடையே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ரயில்வே கேட் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட லோகோ பைலட் ரயிலை நிறுத்திவிட்டு கேட்டை சாத்தியுள்ளார். பின்னர் 5 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து லோகோ பைலட் இரயில்வே கட்டுப்பாட்டு அறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட் கீப்பர் ராமுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கேட் கீப்பர் ராமு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் செம்மங்குப்பம் நிகழ்ந்த சுவடு மறைவதற்குள்ளாகவே இந்த சம்பவம் நடைபெற்றது ரயில்வே துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.