பொங்கல் வேட்டி,சேலைகள் எப்போது? - தேதி அறிவிப்பு
காஞ்சிபுரத்தில் முருகன் கூட்டுறவு சங்கம் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு என்றும், தாங்கள் உத்திரவாதத்துடன் (கேரண்டி) விற்பனை செய்வதாகவும் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ₹800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போது நெசவாளர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கூலி கிடைப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும், 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.