×

கல்வான் மோதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது!

 

கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் கடும் மோதல் நிலவியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து பழனியின் உடல் அவரின் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தனர். தமிழ்நாடு அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. இச்சூழலில் கடந்த ஜனவரி மாதம் வீர மரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது.

நேற்றிலிருந்து ராணுவ வீரர்களுக்கு விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இன்றும் தொடர்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டு வீரர் பழனியின் சார்பில் அவரது மனைவி வானதி தேவி  வீர் சக்ரா விருதைப் பெற்றுக்கொண்டார்.  தனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் கிடைத்த மரியாதையாகவும் நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரமாகவும்  கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.