×

11 ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பதா? ராமதாஸ் கேள்வி 

 

 பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட  பகுதி நேர சிறப்பாசிரியர்கள்,  தங்களுக்கு  பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால், பணியமர்த்தப்படும் போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டது.பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்போது ரூ.40,000 ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவதால் ரூ.10,000 மட்டுமே கிடைக்கிறது. இந்த ஊதிய உயர்வு கூட  பா.ம.கவின் தொடர் வலியுறுத்தலால் தான்  கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாத்தியமானது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படாததால் 2012-ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்ட 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி விலகி விட்ட நிலையில், சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கருணை அடிப்படையில் பனியமர்த்தப்படவில்லை. மாறாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர்.  அதனால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியும்.  இதை சென்னை உயர்நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்  அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பணி நிலைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும்  பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு நடத்த வேண்டும்; அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.