இனி பம்பையில் ஆடைகளை வீசினால் ரூ.5,000 அபராதம்! கேரள அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல்!
சபரிமலை செல்லும் பக்தர்கள் பலர், பம்பையில் குளித்துவிட்டு தங்கள் ஆடைகளை ஆற்றிலேயே விட்டுச் செல்கின்றனர். இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு, ஆற்றுநீரை மாசுபடச் செய்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பம்பை நதியில் ஆடைகளை வீசும் பக்தர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு ஆணை வெளியிட்டது.
சபரிமலை கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திலீப் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அபராதம் செலுத்த தவறும் பக்தர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. இதை எதிர்த்து சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் அமர்வு, அரசின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. பம்பை நதியின் துாய்மையை பாதுகாக்கவும், கழிவு மேலாண்மையை சீரமைக்கவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும் பம்பை ஆற்றில் வீசப்படும் பழைய துணிகளை சேகரித்து அவற்றை கிளீன் கேரளா நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து தேவசம்போர்டு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை டிச.8-க்கு ஒத்திவைக்கப்பட்டது.