இனி பி.எப். பணத்தை மாதந்தோறும் பென்ஷன் போலப் பெறலாம்! – 8.25% வட்டியுடன் EPFO கொண்டுவரும் 3 அசத்தல் வாய்ப்புகள்!
இ.பி.எப். பயனாளர்கள் ஓய்வு பெறும்போது, தங்களது மொத்த பி.எப்., சேமிப்பு தொகையையும் ஒரே நேரத்தில் எடுப்பதற்கு பதிலாக, மாதந்தோறும் தவணை முறையில் பெறலாம். இதற்காக எஸ்.டபிள்யூ.பி., என்ற 'முறையான பணம் எடுக்கும் திட்டத்துக்கு' மத்திய அறங்காவலர் குழுவான சி.பி.டி., ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக 55 வயதிற்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 6.30 லட்சம் பேர் முதற்கட்டமாக பயன்பெறுவார்கள் என தெரிகிறது. இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும், குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இ.பி.எப்.ஓ., விரைவில் வெளியிட உள்ளது.
தற்போதைய விதிகளின்படி, ஓய்வு பெற்ற மூன்று ஆண்டுகளுக்குள் முழு பி.எப்., தொகையையும் எடுக்காவிட்டால், அந்த கணக்கு செயல்படாத கணக்காக மாறி வட்டி கிடைப்பது நின்று விடும். புதிய திட்டத்தின்படி பயனாளர்கள், தங்களது விருப்பத்தின்படி, பி.எப்., பணத்தை தவணை முறையில் மாதந்தோறும் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்கு இ.பி.எப்.ஓ., அறிவிக்கும் வட்டி (தற்போது 8.25%) தொடர்ந்து கிடைக்கும். இதில் மூன்று விதமான வாய்ப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. 1. சேமிப்பு தொகை முழுவதையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணைகளாக பெறுவது 2. ஒரு பகுதி பணத்தை ஆரம்பத்திலேயே மொத்தமாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை தவணை முறையில் பெறுவது 3. அசல் தொகையை அப்படியே வைத்துவிட்டு, அதற்கு கிடைக்கும் வட்டியை மட்டும் மாதந்தோறும் எடுத்து கொள்வது.
தவணை முறையில் பணம் பெறும்போது பயனாளர் உயிரிழந்தால், அவரது வாரிசுதாரர் மீதமுள்ள முழு தொகையையும் ஒரே நேரத்தில் எடுத்து கொள்ளலாம் அல்லது தொடர்ந்து தவணை முறையில் மாதந்தோறும் பெற்று கொள்ளலாம் * அவசர தேவை ஏற்பட்டால், இந்த திட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு மீதமுள்ள முழு பணத்தையும் எடுத்து கொள்ளும் நெகிழ்வு தன்மையும் வழங்கப்பட உள்ளது.
இ.பி.எப்.ஓ., தனது முதலீட்டு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், வருடாந்திர புதிய பங்களிப்பு தொகையில் அதிகபட்சம் 3 சதவீதத்தை ஏ.ஐ.எப்., எனப்படும் மாற்று முதலீட்டு நிதிகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு நிதியை நிர்வகித்து வரும் இ.பி.எப்.ஓ., 2024 - -25ம் நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 3.36 லட்சம் கோடி ரூபாயை வருடாந்திர பங்களிப்பாக பெற்றுள்ளது. நீண்டகால அடிப்படையில் பயனாளர்களுக்கு அதிக வட்டி மற்றும் லாபம் ஈட்டி தரும் வகையிலும், முதலீடுகளை பன்முகப்படுத்தவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.நேரடியாக தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக, அரசு சார்ந்த நம்பகமான அமைப்புகள் வாயிலாக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பி.எப்., கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளை இ.பி.எப்.ஓ., தளர்த்தியுள்ளது. இதன் வாயிலாக பயனாளர்கள் 55 வயதை எட்டுவதற்கு முன்பே தங்களது மொத்த பி.எப்., சேமிப்பில் 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 90 சதவீதம் வரை எடுத்து கொண்டாலும், கணக்கை உடனடியாக முடிக்காமல் 10 சதவீத தொகையுடன் தொடர்ந்து பராமரிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.