×

லலிதா சகஸ்ரநாமம் முதல் அபிராமி அந்தாதி வரை: தை வெள்ளியில் அன்னைக்கு உகந்த வழிபாடுகள்..!

 

நாளை தை மாதத்தின் வெள்ளிக்கிழமை. தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. நம் வாழ்வை வளமாக்க அம்பாள் தயாராக இருக்கிறாள். அவளின் ஆலயத்துக்குச் செல்லுவோம். அவளின் திருச்சந்நிதியில் நின்று நம் கோரிக்கைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை அவளிடம் முன்வைப்போம். செந்நிற மலர்கள் அம்பாளுக்கு உகந்தவை. அரளி முதலான மலர்களைச் சூட்டி அன்னையை அலங்கரிப்போம்.

லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வோம். சுமங்கலிகளுக்கு புடவை அல்லது ஜாக்கெட் பிட், வளையல், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு முதலான மங்கலப் பொருட்களை வழங்கி நமஸ்கரிப்போம். இதனால் நம் தாலி பாக்கியம் நிலைக்கும். மணமாகாத பெண்களுக்கு தாலி பாக்கியம் கிடைக்கும்.

இல்லத்தில் சுபிட்சத்தைக் கொடுத்திடும் அன்னையை, சக்தியை, பராசக்தியை மனதார வழிபடுவோம். தை வெள்ளியில் ஆத்மார்த்தமாக வணங்குவோம். நம்மையும் நம் சந்ததியையும் சிறப்புடனும் சுபிட்சத்துடனும் இனிதே வாழச் செய்து அருளுவாள் அம்பாள்!