ஈஷா சார்பில் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோக வகுப்புகள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் சுமார் 1,000 இடங்களிலும், தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் இலவச யோக வகுப்புகள் நடத்தப்பட்டன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு யோகா வகுப்புகளில், நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், முப்படையினர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த வகுப்புகளில், ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ தியானம் மற்றும் ‘சூர்ய சக்தி’ உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன. சத்குருவின் யோக தின வாழ்த்து செய்தியில், "நாம் யோகா என்று அழைப்பது ஒரு தத்துவமோ, சித்தாந்தமோ, நம்பிக்கை முறையோ அல்லது மதமோ அல்ல என்பதை நினைவூட்டும் ஒரு நாள் தான் சர்வதேச யோகா தினம். இது உள்நிலை நல்வாழ்விற்கான அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். உங்கள் மதம், இனம், சாதி, வகுப்பு, பாலினம் எதுவாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் உங்களை ஒரு உன்னதமான நிலைக்கும் உடல், மனம், உணர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல்களில் உச்சகட்ட செயல்பாட்டிற்கும் கொண்டு சேர்க்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தனித்துவமிக்க அறிவுத்திறனின் ஆற்றலை வெளிக்கொணரும்." என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 'மிராக்கிள் ஆப் மைண்ட்' தியானம் புதியதாக 6 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த தியான செயலி இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, ஸ்பானிஷ் மற்றும் ரஷ்யன் ஆகிய 6 மொழிகளில் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கூடுதலாக கன்னடம், மலையாளம், குஜராத்தி, பங்களா, இத்தாலியன் மற்றும் நேபாளி ஆகிய மேலும் 6 மொழிகள் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் தங்கள் சொந்த மொழியிலேயே தியானத்தை எளிதாகக் கற்க முடியும். இந்தச் செயலியை isha.sadhguru.org/in/en/miracle-of-mind என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்தில், விரைவு அதிரடிப்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும் கோவையில் உள்ள ஐ.என்.எஸ் அக்ரானி, 43 விங் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷன் மற்றும் ஏர் வாரியர் ஆகிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் யோகா வகுப்புகள் நடைபெற்றன. மேலும், மதுக்கரை 195 ஃபீல்ட் ரெஜிமென்ட் ராணுவ முகாமிலும் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதவிர, உதகை வெலிங்டன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ராணுவப் பயிற்சி கல்லூரி வளாகத்திலும் ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.
The International Day of Yoga is a reminder that what we call Yoga is not a philosophy, an ideology, a belief system or a religion. This is the science and technology for inner wellbeing. Whatever your religion, race, caste, creed, gender, these technologies render you to optimal… pic.twitter.com/c2BRC0Ewyw
— Sadhguru (@SadhguruJV) June 21, 2026
பெங்களூருவில் உள்ள ஈஷா மையமான ‘சத்குரு சந்நிதி’-யில் உள்ள ஆதியோகி திருவுருவச் சிலைக்கு முன்பாக பிரம்மாண்ட யோகா வகுப்பு நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் எனப் பலரும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சென்னையில் எல் அண்ட் டி, முருகப்பா மேனேஜ்மென்ட் சர்வீசஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், டிபிஎஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி , டெக் மஹிந்திரா மற்றும் லெக்ரான்ட் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கும், வனவாணி பள்ளியிலும் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன. மேலும், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இந்திய கடற்படை மற்றும் ஆவடியில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்திலும் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் கோவை ஈஷா யோக மையத்தில் வழங்கப்பட்ட இலவச யோகா மற்றும் தியான வகுப்புகள் மூலம் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். யோகா தின கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், இந்த இலவச யோகா வகுப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளன. இனிவரும் மாதங்களிலும் ‘சூர்ய சக்தி’ மற்றும் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ தியான இலவச யோகா வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த இலவச வகுப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள் Isha.co/Suryashakti என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெற 83000 99555 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.