எஃப்க்யூஎல் ஆன்லைன் ஆப் மோசடி - தவெக நிர்வாகி தலைமறைவு
மதுரை மேலூர் பகுதியில் த.வெ.க நிர்வாகியால் நடத்தப்பட்ட FQL டிரேடிங், VG டிரேடிங் என்ற ஆன்லைன் செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி செய்ததாக மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் புகார் எழுந்துள்ளது.
மதுரை மேலூர் பகுதியில் த.வெ.க நிர்வாகியால் நடத்தப்பட்ட FQL டிரேடிங், VG டிரேடிங் என்ற ஆன்லைன் செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி செய்ததாக மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் நத்தம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செயலியை நம்பி நத்தம் வட்டாரத்தில் மட்டும் 60,000 பேர் முதலீடு செய்துள்ளனர். மதுரை, மேலூர், சிவகங்கை புதுக்கோட்டை எல்லாம் சேர்த்தால் இரண்டு லட்சம் பேர் இம்மோசடியில் பணத்தை இழந்திருப்பர் என நம்பப்படுகிறது.
எஃப்க்யூஎல் (FQL) ஆன்லைன் ஆப் முதலீட்டு மோசடியை கண்டித்து பணத்தை இழந்த ஏராளமான மக்கள் மதுரை -மேலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நத்தம் அருகே ரெட்டியாபட்டியில் பண மோசடி செய்த நபர்களை கைது செய்து போலீஸ் அழைத்துச் சென்றனர். அவர்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு, மேலூர் அருகே கட்டயம்பட்டியில் எஃப்க்யூஎல் நிறுவன ஏஜென்ட் வீட்டை மக்கள் அடித்து நொறுக்கினர். மதுரை மாவட்டம் மேலூரில் ஆன்லைன் ஆப் மூலம் ₹52,000 முதலீடு செய்தால் தினமும் வருமானம் என ஆசை காட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.மோசடிக்கு காரணமான தவெக நிர்வாகிகள் முத்துப்பாண்டி மற்றும் ரஞ்சித் தலைமறைவாகியுள்ளதால், அவர்களின் குடும்பத்தினரிடம் காவல்துறையினரால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக மதுரை எஸ்பி அலுவலகத்தில் இதுவரை 1,527 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.