×

65 லட்சம் பணத்துடன் மாயமான 4 ஆண்டு ஊழியர்! - திருநங்கை தோழியுடன் ஊட்டி ரிசார்ட்டில் அடித்த லூட்டி!

 

சென்னையில் தனது முதலாளியிடம் இருந்து ₹65 லட்சம் பணத்தை அபகரித்து கொண்டு, ஊட்டியில் உல்லாசமாக இருந்த ஊழியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருநங்கை தோழியைப் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை கடை நடத்தி வருபவர் நிகால்சந்த் ஜெயின். இவரது கடையில் கடந்த 4 ஆண்டுகளாக நவீன் (30) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 6-ம் தேதி, 26 கிலோ வெள்ளிக்கட்டிகளை கொடுத்து, அதற்குப் பதிலாக ₹65 லட்சம் பணத்தை வாங்கி வருமாறு நவீனை தனது உறவினர் ஒருவரிடம் நிகால்சந்த் அனுப்பி வைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட நவீன், நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

யானை கவுனி போலீஸார் தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அப்போது நவீன் ஊட்டியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (Resort) பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் நவீனை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ₹29,000 ரொக்கம் மற்றும் ஒரு விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நவீனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின: நவீன் தனது திருநங்கை தோழியான பிரார்த்தனா (19) என்பவருடன் இணைந்து இந்தப் பணத்தை திருட திட்டமிட்டுள்ளார்.திருடிய ₹65 லட்சத்தில், ₹63 லட்சத்தைப் பிரார்த்தனாவிடம் கொடுத்துவிட்டு, மீதி ₹2 லட்சத்துடன் நவீன் ஊட்டிக்கு சென்றுள்ளார். திருட்டுப் பணத்தில் புதிய செல்போன், விலை உயர்ந்த ஆடைகளை வாங்கிக்கொண்டு ஊட்டியில் உல்லாசமாக தங்கியிருந்துள்ளார்.

நவீன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் பதுங்கியிருந்த திருநங்கை பிரார்த்தனாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ₹53,23,830 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை போலீஸார் மீட்டனர். 4 ஆண்டுகள் நம்பிக்கையாக வேலை செய்த ஊழியரே, தனது நண்பருடன் சேர்ந்து கைவரிசை காட்டிய சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.