முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் 4 மணி நேரம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!
தவெக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்னை போலீஸார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்திய புகைப்படத்தை காவல் ஆய்வாளர் ராஜா வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ர.23 அன்று மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள வாக்குச்சாவடிகள் அருகே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக வடக்கு கடற்கரை (North Beach) காவல் நிலையப் போலீசார் அவரிடம் இந்த விசாரணையை மேற்கொண்டனர். இச்சம்பவத்தின் போது சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது கட்சியினரைத் தாக்கியதாக துறைமுகம் தொகுதியின் த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, சேகர்பாபு தனக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி சென்னை காவல் ஆணையரிடம் சினோரா அசோக் புகார் அளித்ததோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரினார். மேலும், மிரட்டல் தொடர்வதாகக் கூறி ஏப்.30 அன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த மனு முடித்து வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பி.என்.எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.